You Must Like Cricket?
ஆசிரியர்: Soumya Bhattacharya
பக்கங்கள்: 188
Yellow Jersey Press, London.
நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி இப்படி எல்லாத்திலேயும் கிரிக்கெட் ஊறியவங்க நம்ம நாட்டுலே ஏராளமானவங்க இருக்காங்கன்னு நமக்குத் தெரியும். சாப்பாடு, தண்ணீர் எதுவும் தேவையில்லாமல் எந்நேரமும் ஏதாவது ஒரு ஆட்டத்தைப் பற்றி பேசியவாறு அல்லது பார்த்தவாறு அல்லது படித்தவாறு காலத்தைக் கழிக்கும் ஒரு கும்பலும் இருக்கும். நானும் அந்தக் கும்பலில் ஒருவனாக இருந்தேன் என்பதை பெருமையுடன் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
சிறு வயதில் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி எப்போதும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அம்மாவிடமிருந்து பலத்த அடி/இடி விழும். ஆனால், இந்த ஆசிரியருக்கோ அவர் அம்மாதான் முதல் கோச். கிரிக்கெட் எப்படி விளையாடுவது என்று ஆரம்பித்து அதன் அனைத்து நெளிவு சுளிவுகளையும் சொல்லித் தந்திருக்கிறார். கிரிக்கெட் மீதான இவரது ஆர்வம் குறையாமல் தொடர்ந்து ஆட்டத்தை கவனித்து விளையாடுமாறு ஊக்குவித்திருக்கிறார்.
ஆசிரியருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஊர் ஊராக மாற்றலாகி போய்க் கொண்டிருந்தாலும், கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் எப்படி வளர்ந்து கொண்டேயிருந்தது என்பதையும், பின்னாளில் ஒரு பத்திரிக்கையாளராக ஆனபிறகு, அதே கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்த்து, ஆட்டக்காரர்களை பேட்டி எடுத்து பேசியது வரை அவரது அனுபவங்களை, Slumdog Millionaire பட பாணியில், இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகரை, இந்தியாவின் 40 ஆண்டுகால ஆட்டத்தில், உனக்குப் பிடித்த தருணங்கள் என்னென்ன என்று கூறினால் என்ன பதில் சொல்வார்?
* 1983 உலகக் கோப்பையை ஏந்தியவாறு லார்ட்ஸில் கபில்’ன் வாய்க் கொள்ளாச் சிரிப்பு.
* 2002ல் அதே லார்ட்ஸில் கங்குலி, தன் சட்டையைக் கழற்றி சுழற்றிய விதம்
* 1998ல் ஷார்ஜாவில் மணற்புயலை எதிர்த்து நின்று சச்சின் அடித்த இரு சதங்கள்.
* 2001ல் கல்கத்தாவில் VVSன் 281.
இதே தருணங்களை ஆசிரியரும் விலாவாரியாக சொல்லியுள்ளார். இந்த ஆட்டங்களை, தன் வாழ்க்கையோடு எப்படி சம்பந்தப்படுத்திக் கொள்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். யாராவது இவரிடம் உன் குழந்தை எந்த வருடம் பிறந்தது என்று கேட்டால், நம்ம VVS 281 எப்போ அடிச்சாரு? 2001 தானே? அந்த வருடம்தான் எனக்கு பெண் பிறந்தாள்னு சொல்வாராம்.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்று சொல்வோர் உண்டு. அதை இல்லை என்று மறுக்கிறார் இவர். மதம் எப்போதும் மனிதர்களை இணைத்ததேயில்லை. உதா: குஜராத் சம்பவம். ஆனால், கிரிக்கெட் எப்போதும் அனைவரையும் இணைத்தேயிருக்கிறது என்கிறார். இதற்கும் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு முறை வடஇந்தியாவில் நண்பர்களுடன் ரெயிலில் போய்க் கொண்டிருந்தபோது, சிலர் வந்து உட்கார இடம் வேண்டி கலாட்டா செய்ததாகவும், பின்னர் வானொலியில் கிரிக்கெட் கேட்க ஆரம்பித்ததும், அனைவரும் நண்பர்கள் ஆகிவிட்டதாகவும், தங்கள் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டு, சாப்பாடு வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லி, இத்தகைய மாறுதலுக்கு கிரிக்கெட்டே காரணம் என்று சொல்கிறார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர் என்றபிறகு பாகிஸ்தான் அணியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? அரசியல், வரலாறு, கௌரவம் என்று பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு முறையும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை ஒரு பெரும் போராகவே நினைத்துப் பார்ப்பவர்கள் உண்டு. ஆசிரியரும் இதே போல் நினைப்பதால், பாகிஸ்தானுக்காக ஒரு தனிக் கட்டுரையே உண்டு.
கிரிக்கெட் சூது பற்றி ஒரு கட்டுரை. இந்த சர்ச்சை/புகாரில் சம்பந்தப்பட்டு பலர் ஆட்டத்தை விட்டுவிட்டாலும், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கபில் அழுதது யாராலும் மறக்க முடியாத ஒன்று. இது நடந்து சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் கபிலை பார்த்து, கை குலுக்கி ஒரு நாள் அவருடனே இருக்கும்படியான ஒரு சூழ்நிலை உருவானதாம். அப்போதுகூட கபில் இன்னும் அந்த பழியால் ஏற்பட்ட அவமானத்திலிருந்து வெளியே வந்திருக்கவில்லை என்று உணர்ந்தேன் என்று எழுதுகிறார்.
இந்தியா, இங்கிலாந்து என்று மாறி மாறி வாழ்க்கையைக் கழித்த சௌம்யா தன் சிறுவயதில் லார்ட்ஸிலும், ஈடன் கார்டன் மைதானத்திலும் பார்த்த ஆட்டங்கள் சிலவற்றைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
* முதல் நாள் ஆட்டத்தைப் பார்த்தல்
* பின்னர் அதன் Highlightsஐப் பார்த்தல்
* பள்ளி/கல்லூரி/அலுவலகத்தில் அந்த ஆட்டத்தைப் பற்றிப் பேசுதல்
* தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தல்
* அடுத்த நாள் The Hinduவில் இது தொடர்பான செய்தியை வாசித்தல்
என்று காலங்களைக் கழித்த கிரிக்கெட் ரசிகர்கள், தங்களின் சக-ரசிகனின் கதையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.
***
// முதல் நாள் ஆட்டத்தைப் பார்த்தல்
ReplyDelete* பின்னர் அதன் Highlightsஐப் பார்த்தல்
* பள்ளி/கல்லூரி/அலுவலகத்தில் அந்த ஆட்டத்தைப் பற்றிப் பேசுதல்
* தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தல்
* அடுத்த நாள் The Hinduவில் இது தொடர்பான செய்தியை வாசித்தல்//
நான் கிட்டதட்ட இந்த மாதிரியான ஆசாமிதான்! சுவாரசிய கட்டுரை!
சிவா கிருஷ்ணமூர்த்தி