சிறப்புப் பதிவர் - கண்ணன்
ஒரு நாவல் எப்படி ஒரு வாசகனைத் தன்னுள் முழுமையாய் மூழ்கடித்து, ஓர் உச்சகட்ட மனநிலைக்கு இழுத்துச் செல்ல முடியும் என்பதற்கு மிகச்சிறந்த சான்று - அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு.
சந்திரசேகரன் என்கிற ஒரு சிறுவன் ஆளாகி முதிரும் கதை. இந்திய விடுதலைக்குப் முன்னும் பின்னும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஐதராபாத் களம். பிரபலமான எந்தவொரு ‘coming of age’ நாவலுக்கும் நிகராக ஒப்பு நோக்கக்கூடிய ஒரு படைப்பு.
சந்திரசேகரனின் வளர்ச்சியும் சமகால சரித்திரமும் பிண்ணிப் பிணைந்து வருகின்றன.
படிக்கும்போது, வழக்கமான அசோகமித்திரனையும் காண முடிகிறது; முற்றிலும் மாறுபட்ட அசோகமித்தினும் தென்படுகிறார். அவரது முத்திரை துளங்கும் எளிய (அல்லது எளிமைபோல் மாயத்தோற்றம் தரும்) நடையும் உள்ளது; துள்ளிப் பாயும் நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்லும் துள்ளலான நடையும் ஆங்காங்கே உள்ளது.
மாணவர் போராட்டங்கள் வலுவாக நடந்து முடிந்த இந்தக் காலகட்டத்தில் இந்நாவலின் பல நிகழ்ச்சிகள் ஓர் அண்மைத்தன்மைப் பெறுகின்றன.
தலைகாணி அளவில் இல்லாவிடினும், இந்த ஒற்றைப் படைப்பில் பல்வேறு இழைகளைப் பிசிறின்றித் தொகுத்திருக்கிறார்:
பதின்ம வயதுச் சிறுவனின் மனவோட்டங்கள்; அந்தப் பருவத்திற்கே உரித்தான அனுபவங்கள், ஆசைகள், அச்சங்கள், சச்சரவுகள், நட்புகள், காதல்கள்.
ஓர் இந்து பிராமணக் குடும்பத்துக்கு மற்ற மதத்தினர் மீதிருந்த ஐயங்கள், வெறுப்புகள், உறவுகள்.
வேற்றூரில் வாழும் தமிழர்களுக்கு இருந்த மொழிச்சிக்கல்கள்; மாற்று மொழியினரோடு இருந்த தொடர்புகள்.
ஓர் அடித்தட்டு உயர்வகுப்பு இளைஞன், மேல்த்தட்டு முஸ்லிம் மாணவர்களோடு இணையும் போது விளையும் அனுபவங்கள்.
கிரிக்கெட் அப்போதே செலுத்தத் தொடங்கியிருந்த ஆதிக்கம்; ஒரு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போதும் இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச் என்ன ஆனது என்று அறியும் ஆர்வம்; பிராட்மேனும் லாலா அமர்நாத்தும் எவ்வளவு ரன்கள் எடுத்தனர் என்பதைக் கவனிக்கும் வெறி.
பிரிட்டிஷ் அரசாங்க ரயில்வே ஊழியர்களுக்கு இருந்த ஒருவிதப் பெருமிதம்; அவர்களுக்கும் ஐதராபாத் அரசு அதிகாரிகளுக்கும் இருந்த உரசல்.
போராட்டத்தில் ஈடுபட மற்றவர்கள் ஏற்படுத்தும் நிர்ப்பந்தம்; அப்படிப் போராடக் கிளம்புவது நிர்ப்பந்தத்தாலா, உண்மையான உணர்வுகளாலா, இரண்டும் கலந்த கலவையா என்று எழும் கேள்விகள்.
போராடப் போகும்போது ஏற்படும் அச்சங்கள், சலனங்கள், சந்தேகங்கள்.
போராடத் தூண்டியவர்கள், போராட்டம் தீவிரமாகும்போது காணாமற் போகும் மாயம். பாதியில் போராட்டம் தடைபட்டு நிற்க, கல்லூரிக்கும் செல்லமுடியாமல், எவரது வழநடத்தலும் இல்லாமல் தவிக்கும் தவிப்பு.
அரசாங்க வேலையில் இருக்கும் ஆசிரியருக்கு, சந்திரசேகரன் பாடிய ‘விடுதலை, விடுதலை’ பாடல் மீது ஏற்பட்ட ஈர்ப்பு; விடுதலைப் போராட்டத்தில் அவன் ஈடுபட்டிருக்கிறான் என்று தெரிந்ததும் ஏற்படும் படபடப்பு; வேண்டாம் என்று விடுக்கும் எச்சரிக்கை.
1948லும் கூட, நிறையத் தமிழர்களுக்குப் பாரதி யாரென்று தெரியாத நிலை.
தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம் குடும்பத்துக்கு நிஜாம் மீது இருந்த வெறித்தனமான பக்தி, நம்பிக்கை.
அருகிலேயே பல ஆண்டுகள் அமைதியாக வாழ்ந்த குடும்பங்களுக்கிடையில், சூழல் மாற்றம் ஏற்படுத்தும் உரசல்கள்; வெளிக்கொணரும் வன்மங்கள்.
பாரதி நினைவகத்துக்குப் பணம் அனுப்பிய, காந்தி மீது ஈர்ப்பு கொண்ட, எந்த வம்புக்கும் போகாத, ஏன் கல்லூரிக்குச் செல்லவில்லை என்று எப்போதும் கேட்காத, கேட்கக்கூடிய சந்தர்ப்பங்களைக்கூடத் தவிர்க்கிற தந்தை; தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஓர் அழகான உறவு.
எருமை மாட்டின் மீதிருக்கும் பரிவு, எரிச்சல்.
அன்றைய சினிமாக்கள், சினிமாக் கொட்டகைகள்.
‘ஒட்டி உலர்ந்து காரின் பின் சீட்டில் சிறு பகுதியை நிரப்பிக்கொண்டு இருக்கும்’ ஹிஸ் எக்ஸால்டட் ஹைனஸ் மீர் உஸ்மான் அலி கான்பகதூர் ப்ளாக்வா வ்ளா வ்ளா நிஜாம்.
இரண்டு ஆண்டுகள் அச்சமூட்டிய ரஜாக்கர்கள்; துப்பாக்கிகளோடு வந்த இந்தியப் படையை வாள்கொண்டு எதிரத்து மாண்ட இரண்டாயிரம் ரஜாக்கர்கள்.
பஞ்ச காலத்தில் அரிசிக்குப் பதில் வேண்டா வெறுப்பாய் சோளத்தை உண்ணும் நிலை.
வீட்டுக்குள் ஒளிந்து கொள்ள ஓடிவந்தவனைக் காட்டிக் கொடுக்காத ஏழை முஸ்லிம் கிழவி; இறுதியில், ஓடி நுழைந்த இன்னொரு வீட்டில் அவனைக் கூசச்செய்த அந்த இளம்பெண்.
கதை நெடுகச் சொல்லப்பட்டும் சொல்லப்படாமலும் வரும் காந்தியின் நிழல்; காந்தியின் மரணம் ஏற்படுத்தும் தாக்கம்.
உண்மையில் கோலோச்சும் வறுமை.
இத்தனை அடுக்குகளையும் தாங்கி நிற்கின்றன அசோகமித்திரனின் ஐதராபாத்-செகந்தராபாத் இரட்டை நகரங்கள். அவற்றின் டாங்காக்கள், ஆலமரம், லான்சர் பாரக்ஸ், சாலைகள், குடிசைகள், முட்கள், புதர்கள், பசுக்கள் என்று ஒவ்வொன்றும் துல்லியமாய் சித்தரிக்கட்டிருக்கின்றன. ஐதராபாத்திற்கு நான் ஓரிரு முறைதான் சென்றிருக்கிறேன்; அதிகம் பார்த்ததில்லை. ஆனாலும், என் இளமையை நான் கழித்த கோவையை விடவும் பழக்கமான ஓர் இடத்துக்கு அசோகமித்திரன் என்னை அழைத்துச் சென்றுவிட்டதாகவே உணர்ந்தேன்.
அவர் இந்த நாவலை எழுதிய போது ஐதராபாத்திலிருந்து நீங்கி 20-25 ஆண்டுகளுக்கு மேலிருக்கும். எப்படி இந்த நிலச்சித்திரங்கள் இவ்வளவு துல்லியமாய் (துல்லியம் குறித்துச் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை) ஒருவர் மனதில் பதிந்திருந்து எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்பது வியக்கத்தக்கதுதான்.
பல்வேறு தருணங்கள் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றிற்கான பதில்களை இன்றைக்கும் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்.
போராட்டத்திற்கு வராத மாணவர்களை வழிமறித்து வளையல் தருகின்றனர் சில பெண்கள். ஆனால் அவர்களும்கூட காரில் வந்திறங்கும் பணக்கார மாணவர்களை அணுகவதில்லை. சந்திரசேகரனுக்குள் எழும் உணர்வுகள் நமக்குள்ளும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
‘அப்படி என்றால் வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் திருப்பிப் பதில் தரமுடியாத சாதுக்களுக்கும்தான் சத்யாகிரஹமும் பள்ளி மறுப்பும்: அவர்கள்தான் அவர்களுக்கென்று இருக்கும் சிறிதையும் தியாகம் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவர்களைக் கேலி செய்யலாம், நிர்ப்பந்தப்படுத்தலாம், பலவந்தம் செய்யலாம்.’
இன்னொரு இடத்தில், வறுமை நிறைந்த பகுதியில் உலவும் போது சந்திரசேகரனுள் எழும் எண்ணங்கள்:
‘அழுக்கும் நோயும் சர்வசாதரணமாகிப்போன வாழ்க்கை. இங்கே மதத்திற்கு என்ன வேலை? ஆனால், இம்மாதிரி இடங்களில்தான் மதக் கலவரங்கள் நடக்கும்போது வீடுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன, மண்டைகள் உடைகின்றன, உடைமைகள் கொளுத்தப்படுகின்றன.’
எந்த ரெஃப்யூஜிக்களைப் பயத்தோடும், கரிசனத்தோடும் தொடர்ந்து கவனித்து வந்தானோ, அந்த அகதிகள் திடீரென்று காணாமற் போனபோது அவர்களுக்காக வருந்துகிறான்.
‘மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்த அந்த ஜனக்கூட்டம் அத்தனையும் எங்கோ மறைந்து போயிருந்தது. எங்கே ஒருவர்கூடப் பாக்கி இல்லாமல் போயிருக்கக்கூடும்? இப்போது எதைப் பாதுகாத்துத் தூக்கிக் கொண்டு போயிருப்பார்கள்? அவர்கள் தூக்கிக்கொண்டு போக என்ன இருக்க முடியும்?’
துலுக்கன் என்றே பல இடங்களிலும் பெயரிட்டுச் சிந்தித்து வரும் சந்திரசேகரன் இறுதி சில பக்கங்களில் இஸ்லாமியப் பள்ளி, முஸ்லிம் குடும்பம் என்று நினைக்கத் தொடங்குவது, அவன் பக்குவமடையத் தொடங்கியதன் வெளிப்பாடோ என்று எண்ணத் தோன்றுகிறது.
18வது அட்சக்கோடு படித்து முடித்து ஒரு வாரம் ஆகிறது. மனதில் அது ஏற்படுத்திய அசைவுகள் இன்னும் அடங்கவில்லை.
எழுத்தாளர் - அசோகமித்திரன்
இணையத்தில் வாங்க - 18ஆவது அட்சக்கோடு
//கதை நெடுகச் சொல்லப்பட்டும் சொல்லப்படாமலும் வரும் காந்தியின் நிழல்; காந்தியின் மரணம் ஏற்படுத்தும் தாக்கம்.//
ReplyDeleteஆமாம், "காந்தி, நீ செத்துப் போயிட்டியா?" னு கேட்டு அழுவது இன்னமும் என் மனதில் ஏற்படுத்திய வியப்பும், தாக்கமும் மறையவில்லை. அந்த நாட்களில் காந்தி என்ற ஒற்றைச் சொல் எத்தனை மனித மனங்களை ஆக்கிரமித்து அவர்கள் வாழ்க்கைப் பாதையைப் புரட்டிப் போட்டிருக்கிறது!
உங்க விமரிசனம் படிச்சப்புறம் மறுபடியும் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோன்றுகிறது.
ReplyDelete