பதிவர் - நட்பாஸ்
யாரோ மேஜ் ஸ்ஜோவால், பேர் வாஹ்லூ என்ற இரட்டையர் இணைந்து எழுதிய மார்ட்டின் பெக் தொடர் துப்பறியும் கதை ஒன்றைப் பற்றி பைராகி அறிமுகப் பதிவு எழுதியிருந்தார்-
எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படியெல்லாம் எழுத முடியுமா சொல்லுங்கள்?
எத்தனை விதமான விசாரணை தந்திரங்கள் இருக்கின்றன என ஒரு பக்கம் உரைத்தாலும், புலனாய்வு செய்வது எத்தனை நிதானமான காரியம் என்றும் புரிகிறது. ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் மார்ட்டின் பெக் காட்டும் அசாத்தியமான உழைப்பு அசர வைக்கிறது. காவல்துறையினரின் தனிப்பண்புகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் காட்டுகிறது. அசாதரணமாக செய்கைகள் செய்பவர்கள் அல்ல அவர்கள். சாதாரண செயல்களை அசாதாரண உழைப்பை கொடுத்துச் செய்பவர்கள்.
பைராகி மார்டின் பெக் கதைகளைப் பற்றி இப்படியெல்லாம் புளகாங்கிதம் அடைந்தால், சொல்வனம் இணைய இதழில் மைத்ரேயன் என்பவர் இந்தக் கதைகளை எழுதியவர்களை இலக்கிய பீடத்தில் அமர்த்த முயற்சிக்கிறார் -
சஸ்திர சிகிச்சைக்கான கத்தி போல குற்ற நாவல்களைப் பயன்படுத்தி, சமூகநல அரசு (Welfare State) என்ற பெயரில் கேலிக் கூத்தாகி நிற்கிற ‘முதலியத்தின்’ அடிவயிற்றைக் கிழித்துக் காட்டும் முயற்சிகளே இவை’என்று வாஹ்லா - கோவால் தம்பதியினர் சொல்கிறார்கள்...
உத்தமமான முயற்சி என்று பாராட்ட வேண்டியதுதான். இது குறித்து அடிக்குறிப்பில் மைத்ரேயன் -
விகிபீடியாவில் கிட்டும் தகவல். சமூக நல அரசு என்ற அளவில் உலகிலேயே மிகக் குறைவான அசமத்துவம் நிலவும் நாடுகள் என்று பெயர் பெற்ற ஸ்காண்டிநேவியன் நாடுகளில் இத்தனை கோபமும், தாக்கும் நோக்கும் இருக்கிறதென்றால், சோசலிசம் என்றும், கம்யூனிசம் என்றும் பெயரை வைத்துக் கொண்டிருந்த பல நாடுகளில் நிலவிய பெரும் ஏற்றத் தாழ்வுகள் மீது அந்நாட்டு எழுத்தாளர்களும், மக்களும் எத்தனை மடங்கு கூடுதலான கோபம் கொண்டிருக்க வேண்டும்? அந்த நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் சுதந்திரமாக வெளிவந்தால் அந்நாடுகளின் பொய்முகங்கள் கிழியும்.
மேற்கத்திய நாடுகளில் மர்மக் கதைகள் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன, முதலியத்தின் அடிவயிற்றையும் பொய் முகங்களையும் கிழிக்கின்றன. இதையெல்லாம் வாசித்துவிட்டு, அடடா, நம்மூர் கதைகளிலும் இப்படி ஏதாவது சொல்ல முடியுமா, என்று ஒரு அவசரத் தேடலில் தமிழ்வாணன் எழுதிய "நடிகையின் உயில்" என்ற முழு நாவலைக் கையில் எடுத்தேன்.
ஏமாற்றம்! இதைவிட, தமிழ்வாணனின் "மூவரை விழுங்கிய முதலை'யில் கூடுதல் சமூக யதார்த்தம் இருந்திருக்கலாம். கதைச் சுருக்கத்தைத் தவிர ஒரு புத்தக அறிமுகனுக்கு இது குறித்துச் சொல்ல எதுவுமில்லை. வாசகர்களை விடுங்கள், சுவாரசியமாக எதை எழுதினாலும் படிப்பார்கள். ஆனால் புத்தகத்தைப் பற்றி எழுதுபவர்களுக்கு கொஞ்சமாவது தீனி கொடுக்க வேண்டும் என்ற கவலை இருக்கிறதா ஐயா, உங்களுக்கு? அப்புறம் எப்படி உங்களை உலக அளவில் பரப்புரை செய்ய முடியும்?
கலைநாயகம் ஒரு தயாரிப்பாளர் கம் இயக்குனர். முடங்கிப் போகும் நிலையில் இருக்கும் அவரது "இரண்டாவது நிலா" படத்தைக் காப்பாற்றும் விதமாக, இப்போ அப்போ என்று இத்தனை நாட்கள் போக்கு காட்டிக் கொண்டிருந்த பிரபல நடிகை பவழவல்லி அவருக்கு சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் கால்ஷீட் கொடுத்து விடுகிறார் - "பேசி முடித்ததும் அந்தத் தொலைபேசிக்கு ஆசை தீர முத்தம் கொடுக்க வேண்டும்போல இருந்தது அவருக்கு!"
ஆனால் அவரது துரதிருஷ்டம், பவழவல்லி சென்னை வந்ததும் ஏர்போர்ட்டில் இருந்து தன் காரை தானே ஓட்டிக் கொண்டு வரும்போது மீனம்பாக்கம் தாண்டியதும் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவன் மீது தன் காரை மோதி விடுகிறாள் - "அவன் சைக்கிளிலிருந்து அப்பால் தூக்கி எறியப்பட்டான்! மண்டை உடைந்து சிதறியது! சாலையெங்கும் செங்குருதி!". அவனை பின் சீட்டில் போட்டுக் கொண்டு போலீசில் சரணடையும் பவழவல்லி கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறாள்.
துவண்டு போகிறார் கலைநாயகம் - "அறையில் இருள்! அவரது அகத்திலும் இருள்தானே!"
துணை இயக்குனர் தாண்டவன் கை கொடுக்கிறான். நிலாமணி என்ற ஒரு நாடக நடிகை இருக்கிறாள். அவள் அச்சு அசலாக பவழவல்லி போலவே இருப்பாள், என்ற சேதி கொடுக்கிறான். இரவு வேளையில் இருவரும் அவளைத் தேடி சூளைமேட்டுக்குச் செல்கிறார்கள். நல்ல வேளை, இங்கே கொஞ்சம் சமூக யதார்த்தம் இருக்கிறது. மேட்டுக்குடி முதலாளிகள், உழைப்பை உறிஞ்சி பணம் பண்ணும் பணக்கார வர்க்கத்தினர், பெண்ணுடலை போக யந்திரமாகப் பார்க்கும் ஆணாதிக்கம் என்று முகத்திரைகளைக் கிழிக்காவிட்டாலும், கொஞ்சம் போல விலக்கிக் காட்டுகிறார் தமிழ்வாணன். கனவுகளுக்கும் யதார்த்தத்துக்கும், லட்சியங்களுக்கும் நடைமுறை உண்மைகளுக்கும் இடையேதான் எத்தனை பெரிய இடைவெளி!
"இரண்டு மூன்று குடித்தனக்காரர்களைக் கடந்து முற்றங்களில் கிடந்த சமையல் பாத்திரங்களை பூட்சுக் கால்களினால் தட்டி விட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் கலைநாயகம். சினிமாவுக்குப் புதுமுகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இப்படிப்பட்ட தொல்லைகள் பல ஏற்படும் என்று அவர் நன்கு அறிவார். எனவே, பாதை இடிகளையும், சுவர் மோதல்களையும் பொறுத்துக்கொண்டு அந்த வீட்டுப் பின்கட்டுக்குள் அவர் நுழைந்தார்."
இந்த மாதிரி இன்னும் நிறைய எழுதியிருந்தால் நாமும் தமிழ்வாணனை ஸ்ஜோவால், வாஹ்லூ போல் விதந்தோதக் கொஞ்சமாவது முயற்சித்திருக்கலாம். ஆனால், அந்தோ! சினிமா சான்ஸ் கிடைத்த சந்தோஷத்தில்,
"எனக்கு ஒரு குறையும் இல்லை அம்மா," என்று அன்னையின் தோளின்மீது ஒருவித இன்பக் கிளுகிளுப்போடு சாய்ந்தாள் நிலாமணி!
முற்றத்து இடைவெளி வழியே, இருண்டு கிடந்த வானவீதியிலே பல மின்னும் நட்சத்திரங்கள் ஒளி காட்டியதை அவள் கண்டாள். அன்று இரவு -
அவள் தூங்கவில்லை!
ஹூம், என்னத்தச் சொல்ல!
நிலாமணி பவழவல்லி போலவே நடிக்கிறாள், ஆனால் அங்கே ஒரு பிரச்சினை! பவழவல்லி புகழ்பெற்ற நடிகன் கதிரவனை மணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிக்கப்போவதாக முன்னர் சொல்லியிருக்கிறாள், அவனிடம்! ஆனால் அது அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. கதிரவனுக்கோ, தன்னோடு நடிப்பது பவழவல்லியல்ல, நிலாமணி என்று தெரியாது. அவளிடமிருந்து காதல் பேச்சு வரும் என ஏங்கி ஏமாற்றம் காண்கிறான் கதிரவன், இது என்ன புது நாடகம் என்று! இல்லை, அன்று அவள் முன்னம் சொன்னதுதான் நாடகமா? குழப்பம்!
விபத்தில் பவழவல்லியால் காயப்பட்டவன் சாகக் கிடக்கிறான். அந்த துயரத்தில் மனமும் உடலும் ஒடிந்து போகிறது பவழவல்லிக்கு. தனக்கு பதிலாக நிலாமணியையே வைத்து படம் எடுக்கச் சொல்லிவிட்டு சென்னைக்கு வெளியே குன்றத்தூரில் ஒரு மாந்தோட்ட பங்களாவுக்கு ஓய்வெடுக்கச் செல்கிறாள் பவழவல்லி. பவழவள்ளியின் அரண்மனை போன்ற மாளிகையில் இப்போது நிலாமணி.
படப்பிடிப்பில் கதிரவனின் ஆசைப் பார்வையையும் அழகுப் பேச்சையும் சமாளிப்பது ஒரு பிரச்சினை என்றால், அவளது வீட்டுக்கே வந்துவிடுகிறது ஒரு பேராபத்து. பஞ்சாபி உடை உடுத்திய ஒருவனும் கருவண்டு மீசைக்காரனும் பவழவல்லி என்று நினைத்துக் கொண்டு நிலாமணியை, "உன் மெட்ராஸ் வேலையைக் காட்டாதே!" என்று மிரட்டுகிறார்கள். - "ஏன் பவழம், எங்கே அந்தச் சரக்கு? இன்னும் ஏன் போய் சேரவேண்டிய இடத்துக்கு அதை அனுப்பி வைக்கவில்லை?"
எது சரக்கு? பவழவல்லி செய்த குற்றம் என்ன? அவளது வண்டி மோதி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவன் பிழைத்தானா? பவழவல்லியின் கதி என்ன ஆயிற்று? நிலாமணியின் வேடம் கலைந்ததா? இரண்டாவது நிலா படத்தை கலைநாயகத்தால் முழுசாக எடுக்க முடிந்ததா?
இதை எல்லாம் நீங்கள் "நடிகையின் உயில்" வாசித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். சமூக விமரிசனமோ போலீஸ்காரர்களின் நிஜ வாழ்க்கையோ துப்பு துலக்கும் வாழ்வின் நிதரிசனங்களோ இல்லாத இந்த நாவலை பரபரப்பாகப் பக்கங்களைப் புரட்டி வாசிக்க முடிகிறதே தவிர விமரிசிப்பதற்கும் விதந்தோதுவதற்கும் தோதாக யதார்த்தத்தின் வாடை கொஞ்சமும் இல்லை..
இது, வாசகனுக்கு இன்பம்! விமரிசகனுக்குத் துன்பம்!
நடிகையின் உயில், முழு நாவல்,
தமிழ்வாணன் - AUTHOR OF ALL SUBJECTS,
முதற்பதிப்பு - 1974, இரண்டாம் பாதிப்பு - 1984,
மணிமேகலை பிரசுரம்.
விலை ரூ. 6
/// விமரிசிப்பதற்கும் விதந்தோதுவதற்கும் தோதாக யதார்த்தத்தின் வாடை கொஞ்சமும் இல்லை.. ///
ReplyDeleteஇப்படி நெகடிவாக எழுதிவிட்டீர்களே! இது வாசிப்பின் பரவசத்தைப் பகிர்ந்துகொள்ளும் தளம் அல்லவா :)))
:))
Deleteசூப்பர்!
ஆங்கிலத்தில் வரும் குற்றப் புனைவு பற்றி எவ்வளவு எழுதறாங்க, தமிழில் அந்த மாதிரி நாம எழுத முடியுதா, அதுக்கு இடம் கொடுக்கறாங்களா என்ற ஒரு வருத்தம்தான் - அதனால் இதைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும், இந்த நாவலை பரபரப்பாகப் பக்கங்களைப் புரட்டி வாசிக்க முடிகிறது, என்று பதிவு செய்து விட்டேன் பார்த்தீர்களா?
அங்கதான் இந்த நட்பாஸ் நிக்கறான்! :))
நன்றி.
enthusiasm for reading என்பதைத்தான் அப்படி தமிழில் சொன்னேன், ஆனா அது exaltation / euphoria of reading என்ற அர்த்தமும் வருது, தப்புதான்.
Deleteexaltation என்றால்கூட ஓரளவு சரியாக இருக்கும். ஆனா euphoria என்ற அர்த்தம் வருவது பொருத்தமில்லை, ஒப்புக் கொள்கிறேன்.
ஆனா அதுவும்கூட, etymologyப்படி, "1727, a physician's term for "condition of feeling healthy and comfortable (especially when sick)," medical Latin, from Greek euphoria "power of enduring easily," from euphoros, literally "bearing well," from eu "well" (see eu-) + pherein "to carry" (see infer)" என்று அர்த்தம் தருது - http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=euphoria&searchmode=none
பேசாம ஆங்கிலத்தில் நினைப்பதை ஆங்கிலத்திலேயே எழுதிட்டு போயிடணும் - "தமிழ் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மொழியல்ல," அப்படின்னு சும்மாவா சொன்னார் சாத்தான்! :)
இதெல்லாம் என்ன பிரமாதம்! தமிழ்வாணன் ஒரு கதையில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் மருந்தில் ஒரு இந்திய விஞ்ஞானி கலப்படம் செய்யத் திட்டம் போடுவதாக எழுதியிருப்பார். பயோ டெர்ரிசம், சூப்பரான ப்ளாட்தானே... என்கிறீர்களா? பிரச்சினை (கொடுமை) என்னவென்றால் இதை அவர் பெரிய தேசபத்த நடவடிக்கையாக சித்தரிப்பதுதான்! போகட்டும், என்னிடமும் ஏராளமான தமிழ்வாணன் புத்தகங்களும், ஒரு ஆம்னிபஸ் வால்யூமும் கூட உண்டு!
Delete/// ஆனா அதுவும்கூட, etymologyப்படி, "1727, a physician's term for "condition of feeling healthy and comfortable (especially when sick)," medical Latin, from Greek euphoria "power of enduring easily," from euphoros, literally "bearing well," from eu "well" (see eu-) + pherein "to carry" (see infer)" என்று அர்த்தம் தருது - http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=euphoria&searchmode=none ///
இப்பவே கண்ணைக்கட்டுதே!
/// அங்கதான் இந்த நட்பாஸ் நிக்கறான்! :)) ///
ம்ம்ம்... அதுவும் சரிதான்!
கண்ணைக் கட்டுதா?
Deleteநம்பிட்டோம் சரவணன் ஸார்! :)