சிறப்புப் பதிவர்: ஆர்.அனுராதா
எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக்கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல் அல்ல (நன்றி: Snap Judgment)
முன்னெச்சரிக்கை: முதலிலேயே சொல்லிவிடுகிறேன். முழுக்க முழுக்க ரசித்துச் சிலாகித்துப் படித்த புத்தகம் இது என்பதால் இந்தக் கதை பற்றி எதிர்மறையாக நான் ஒரே ஒரு எழுத்தையும் இங்கே எழுதப் போவதில்லை. முழுவதும் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் என்று நான் எழுதியிருப்பது உங்களுக்கு ஒரேயடியாக போரடித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல, ஆதவனே பொறுப்பு.
கதைத் தலைப்புடன், ஆசிரியர் பெயருடன் கதை எழுதப்பட்ட வருடத்தையும் மேலே குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால், விமர்சனம் படிப்பவர்கள் தற்போதைய காலகட்டத்தில் வெளிவந்த நாவல் இது எனக் கருதி விடக்கூடாது என்பதற்காகத்தான்.
ஒற்றை வரியில் சொல்வதானால் டில்லியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை மதிப்பீடுதான் கதை.
வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மூன்று சகோதரர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களுக்கு வேண்டிய மற்றும் வேண்டாத நபர்கள் என இவர்களைச் சுற்றியே கதை வளைய வருகிறது. நாகரிகம் என்னும் பெயரால் ஒவ்வொருவரும் (பாத்திரங்கள்) செய்யும் பாசாங்குகள், அவை அவர்களுக்குத் தரும் திருப்தி அல்லது சலிப்பு, நாகரிக வாழ்க்கை குறித்த அவர்களது மதிப்பீடுகள் இவையே கதையின் மைய இழையாக இருக்கின்றது.
சில வருடங்களுக்கு முன் வெளிவந்த சேதன் பகத் எழுதிய ‘one night at call centre"ன் சில காட்சிகளை 77’ல் வெளிவந்த இந்தக் கதையின் காட்சிகளோடு (கதை, கதாபாத்திரங்களோடு அல்ல) ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் தருவதாக இருக்கிறது. குறிப்பாக...பெண்கள் ரெஸ்டரண்டில் பீடி பிடிப்பது.... ஓ! ஸாரி.. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, pre-marital sex (தமிழில் எழுத கூச்சமாயிருக்கு போங்கப்பா :) ).
இவையெல்லாம் அப்போதே... அந்த 70’களிலேவா? (அப்பாடா! டில்லியில்தான்). ஆனால் பாருங்கள், ஆதவன் இவ்விஷயங்களைக் கையாண்டிருக்கும் விதத்தால் மக்கள் யாரும் அவரை சேதன் பகத் அளவிற்கு எதிர்த்து அல்லது ஆதரித்துப் பிரபலம் ஆக்கவில்லை போலும்.
மனோதத்துவ நிபுணர் போல் கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள்; சமூக அக்கறை கொண்ட விஞ்ஞானி போல் செயற்கை உரங்கள், அதன் தொழிற்சாலைகளால் மண்ணுக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படும் கேடுகள்; ஒரு தேர்ந்த அரசியல் விமர்சகர் போல் அரசாங்கம், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் என ஆதவனின் ஆல்-ரவுண்ட் பர்ஃபார்மன்ஸில் கதையை ரசிக்க முடிகிறது.
அரசாங்க அலுவலகத்தில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் அனைவரது செயல்பாடுகள் அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள், புறக்கணிப்பு என விளக்கமாக எழுதியிருக்கிறார் ஆதவன். பல்வேறு துறைகள் பற்றி, விஷயங்களைப் பற்றி கதாபாத்திரங்களின் விவாதங்கள் சிந்தனைகள் மூலம் தம் கருத்துகளைப் பதிவு செய்வதைப் படிக்கும்போது பல்வேறு துறைகளைப் பற்றிய கதாசிரியரின் ஆழ்ந்த ஞானம் நம்மை நிச்சயம் வியக்க வைக்கிறது என்றால்; இதில் எங்கும் தன் சிந்தனைகளை, யாரோ இருவரின் சம்பாஷனை அல்லது விவாதம் வழியே நம் மீது வலிந்து திணிக்காமல் கதையோட்டத்தோடே கொண்டு செல்லும், சொல்லும் பாங்கில் ஆதவனின்... மேதைமை என்றழைக்கலாமா அந்த பண்பை... அது நிச்சயம் நம்மை பிரமிக்க வைக்கிறது.
ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அதில் பிடித்த சிந்தனையைத் தூண்டும் வரிகளை அடிக்கோடிட்டு திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்டவர்கள் அடிக்கோடிட வேண்டும் என்று ஆரம்பித்தால் சில இடங்களில் பக்கம் பக்கமாக (முழுப்பக்கங்களையும்) அடிக்கோடிடும் அவசியம் ஏற்படும். Random-ஆக பிரித்து ஒரு பக்கத்திலிருந்து நான்கு வரிகளும் அதிக பட்சம் பக்கம் முழுவதையும் select செய்யலாம்.
என்னைப் பொருத்தவரையில் லைப்ரரியில் எடுத்த புத்தகம் இது என்பதால், அடிக்கோடிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் புத்தகம் வாசித்து முடித்த பின் மேலே சொன்ன அதே random முறையில் புத்தகத்தை book cricket விளையாடும் பாங்கில் அங்கங்கே பிரித்த இடத்தில் பிடித்த வரிகளைக் குறிப்பிடுகிறேன்.
பெண் சிந்தனையால் அணுகப்பட வேண்டியவள்...... சிந்தனைக்கு முதலில் விடுதலையளித்து விட வேண்டும். அவள் உருவாக்குகிற பிரமைகளில் ஏமாறும் முட்டாளாக வேண்டும். புலப்படாதவை புலப்படுவது போலவும், புலப்படுவது புலப்படாதது போலவும் பாசாங்கு செய்ய வேண்டும்.
இயற்கையின், சூழ்நிலைகளின் இயல்பு ஒழுங்கீனம்தான். மனிதன் இவற்றிலிருந்து ஒழுங்கை உருவாக்க முயல்கிறான்.
ஒரு சாராரைப் பற்றி உருவாகும் பிம்பத்திற்கு அந்தந்த சாரார் பொறுப்பாளி என்பது உண்மையோ இல்லையோ! ஆனால் மக்கள் தாம் விரும்புகிற ரூபத்தில் - பிம்பத்தில் பிறரைக் காண்கிறார்கள் என்பது மிகவும் உண்மை
வெவ்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு முடிவிற்காக வெவ்வேறு விதமான முடிவுகளை ஒரே சமயத்தில் ஏற்படுமாறு முடித்திருக்கிறார் ஆதவன். எனினும், அந்த முடிவு அத்தியாயம் எழுதிய விதத்தில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார்.
காகித மலர்கள் | ஆதவன் | உயிர்மை | இணையம் மூலம் வாங்க: உயிர்மை
No comments:
Post a Comment