சில மாதங்களுக்கு முன் `குற்றமும் தண்டனையும்` கிராஃபிக் நாவல்
பற்றிய அறிமுகத்தை ஆம்னிபஸ் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இலக்கிய
உலகின் கிளாசிக் எனக் கருதப்பட்ட ஒரு படைப்பு கிராஃபிக் நாவலாக வருவது
படைப்பின் வெற்றியைக் காட்டுகிறது. இதுபோல தமிழின் கிளாசிக் நாவல்கள்
எதிர்காலத்தில் வருங்கால சந்ததியினருக்காகக் கிராஃபிக் நாவல்களாக வரும்.
பெங்களூர் கிராஃபிக் காமிக் நண்பர்கள் நடத்தும் பதிப்பகம் அந்த நம்பிக்கையை
அளிக்கிறது.
இன்று நாம் பார்க்கப்போவது முக்கியமான கிராஃபிக் நாவல்.
கிராஃபிக் நாவலின் முன்னோடி என அழைக்கப்படும் Hellblazer collection
உருவாக்கிய Constantine. ஆலன் மூர், ஸ்டீவ் பெஸெட், ஜேமி டெலானோ
மும்மூர்த்திகள் உருவாக்கிய அதி அற்புத பாத்திரம் கான்ஸ்டாண்டைன்.
கான்ஸ்டாண்டைன் திரைப்படம் மாயமந்திரக் கதை என மனதில் தங்கியிருந்தது.
அதில் வரும் அதிவினோதங்கள் மனதில் தங்கவில்லை. இத்தனை வருடங்களுக்குப்
பிறகு, திரைப்பட நினைவு முற்றிலும் மறந்த நிலையில், இந்த கிராஃபிக் நாவல்
கையில் கிடைத்தது.
திரைப்படங்களில் கதாநாயகன் தோன்றும் காட்சிக்கு இணையாக
இந்த நாவலின் தொடக்கம் அமைந்துள்ளது. அதுவரை கான்ஸ்டாண்டைன் என்பவரைப்
பற்றி முற்றிலும் தெரியாதவர் கூட, அவரது என்ரியைப் பார்த்து நிமிர்ந்து
உட்காருவார். எழுந்து நின்று விசிலடிக்கவேண்டும் என்பது போன்ற தொடக்கம்.
ஏதேதோ திரைப்படங்களின் ஆரம்பக்காட்சியை சிலாகிப்பவர்கள், இந்த நாவலின்
தொடக்கப் படங்களைப் பார்க்க வேண்டும். அந்தளவுக்கு கச்சிதமாக ஹாலிவுட்
திரைப்பட பாணியில் ஆரம்பப் பக்கங்களை அமைத்துள்ளார்கள்.
முதல் காட்சி - மெக்ஸிகோவில் தேவாலையத்தை செப்பனிடும்
ஒருவன் இடிபாடுகளின் ஆழத்தில் சிலுவை வடிவக் கத்தியைக் கண்டெடுக்கிறான்.
கையில் எடுத்தவன் யார் கூப்பிடுவதையும் கேட்காமல், வேலையை அப்படியே
போட்டுவிட்டு தேவாலயதுக்கு வெளியே நடக்கிறான். சாலையில் ஓடும் வண்டிகளை
அவன் மதிப்பதில்லை. வேகமாக இடிக்கும் கார் ஒன்றை ஃப்ரேமில்
காட்டுகிறார்கள். அடுத்த ப்ரேமில் கார் ஓட்டுனர் இடித்த வேகத்தில்
கண்ணாடியை உடைத்து வெளியே விழும் படம். கத்தியைப் கண்டெடுத்தவன் கார்
இடித்தது கூடத் தெரியாமல் சாலையைக் கடந்து எதிர்பக்கம் நடக்கிறான் - சீன்
கட்.
ரெண்டாவது காட்சி - லாஸ் ஏஞ்சல்சில் ஒரு அடுக்குமாடிக்
குடியிருப்புக்குக் கீழே போலிஸ் வண்டிகள் சயரன்களை ஒலிக்கவிட்டபடி
நின்றுகொண்டிருக்கின்றன. `மேல் மாடியில் நரகம்`, எனப் போலீசார் பேசியபடி
காத்திருக்கிறார்கள். சர்ரென கார் ஒன்று அவர்களை உரசி நிற்கிறது. அடுத்த
ஐந்து படங்களின் கோணங்கள் மாஸ் எண்ட்ரி என வகைப்படுத்தலாம். நாயகன்
கான்ஸ்டாண்டைன் சிகரெட்டைப் பற்றவைத்தபடி நிற்கிறான் - சுற்றிலும் போலீசார்
திகைத்துப் பார்க்கிறார்கள்.
`நீயா?`
`ஆமாம். யாராவது இந்த கொடுமையான வேலையை செய்துதானே ஆகணும்`, எனச் சொல்லிவிட்டு அபார்மெண்டுக்குள் நுழைகிறார்.
அங்கு
ஒரு பெண் தலைவிரிகோலமாக கூரை மீது தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறாள்.
அவளுக்குள் புகுந்திருக்கும் ஆவியை வெளியேற்றுவது கான்ஸ்டாண்டைனின் வேலை.
அவனால் மட்டுமே நரகத்துக்கும் இந்த உலகுக்கும் இடைபட்ட உலகினுள் புகுந்து
வெளியேற முடியும். நரகத்தின் சாத்தான் இந்த இடைபட்ட உலகினில் உள்ளவர்களைத்
தூண்டிவிட்டு நமது உலகத்தை நரகமாக்கப் பார்க்கிறான். அவனது தூதுவர்களோடு
மோதுவது கான்ஸ்டாண்டைனின் வேலை. ஆனால் சிகரெட் பழக்கத்தால் நுரையீரல்
கான்சரில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கான்ஸ்டாண்டைன் எப்படி நம்மை
காப்பாற்றப்போகிறார் என்பதே ஹெல்ப்ளேசர் தொடரின் கதை.
நரகத்தையும் இயல்பான உலகத்தையும் மிக மாறுபட்ட வடிவில் காட்டியுள்ளது இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு. வண்ணம், துல்லியமான படங்கள் போன்றவற்றைத் தாண்டி ஓவிக்கோணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. லாங்க் ஷாட், க்ளோசப், ஹெலிகாப்டர் ஷாட் என திரைப்பட பாணியில் கான்ஸ்டாண்டைனின் உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அது தவிர, கான்ஸ்டாண்டைனுடைய ஸ்டைல், அவனது எதிரிகள் நண்பர்கள் அறிமுகம் என பின்னணிக்கதைகள் பலமாக உள்ளன.
நரகத்தையும் இயல்பான உலகத்தையும் மிக மாறுபட்ட வடிவில் காட்டியுள்ளது இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு. வண்ணம், துல்லியமான படங்கள் போன்றவற்றைத் தாண்டி ஓவிக்கோணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. லாங்க் ஷாட், க்ளோசப், ஹெலிகாப்டர் ஷாட் என திரைப்பட பாணியில் கான்ஸ்டாண்டைனின் உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அது தவிர, கான்ஸ்டாண்டைனுடைய ஸ்டைல், அவனது எதிரிகள் நண்பர்கள் அறிமுகம் என பின்னணிக்கதைகள் பலமாக உள்ளன.
கான்ஸ்டாண்டைன் தொடரில் நான் படிக்கும் (பார்க்கும்!?)
முதல் கிராஃபிக் நாவல் இதுதான். கிராஃபிக் உலகின் மன்னன் ஆலன் மூர்
கற்பனையில் ஜான் கான்ஸ்டாண்டைன் எனும் ஹீரோ தோன்றினாலும், நிஜத்தில்
அப்படிப்பட்ட உருவம் கொண்ட ஒருவரை தான் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.
`1986 ஆம் ஆண்டு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கஃபேயில்
உட்கார்ந்திருந்தேன். நாள் முழுவதும் அலைந்திருந்ததில் களைப்பு
மிகுதியாயிருந்தது. ஜன்னல் வழியே தெருவைப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்.
திடீரென என் முன்னே இருந்த கதவு திறந்தது. நீளமான கோட்டுடன் துடிப்பான ஒரு
இளைஞன் உள்ளே நுழைந்தான். நான் அவனையே பார்த்தபடி காபி கோப்பையை வாயருகே
வைத்திருந்தேன். கொஞ்சம் கையை உயர்த்தினால் காப்பியை சுவைக்க முடியும். என்
கண்கள் அவனது உடலசைவையே பார்த்திருந்தன. கைகால்கள் அசைக்கமுடியாமல்
நிலைபெற்றிருந்தன. நிச்சயமாக அந்த இளைஞன் என்னைப் பார்த்து கண்
சிமிட்டினான். என்னால் உணர முடிந்தது; ஆனால் நிஜமா எனத் தெரியவில்லை. அந்த
நிமிடம் ஜான் கான்ஸ்டாண்டைன் பிறந்தான்.`
கெட்ட ஆவிகளோடு பேசும் சக்தி படைத்த கான்ஸ்டாண்டைனைச்
சுற்றி எப்போதும் ஆபத்து நிறைந்திருக்கிறது. உலகத்தைக் காப்பாற்ற வந்தவனாக
அவை நினைக்கின்றன. ஆனால், உண்மையில் கான்ஸ்டாண்டைன் அவ்வளவு நல்லவனில்லை.
கெட்ட ஆவிகளைத் துறத்துவதற்காக எதை வேண்டுமானாலும் பலி கொடுப்பான்.
எடுக்கும் முடிவுகள் தனக்கு மட்டும் நன்மை பயக்குமா எனப் பார்க்கும்
குணாதிசயம். ஆழமான கண்கள். அவற்றின் பின்னே அறியமுடியாதவை ஏராளம்.
கான்ஸ்டாண்டைனின் கதாபாத்திரத்தின் ஸ்டைலைத் தாண்டி நான்
மிகவும் ரசித்தது பல ஒன் லைனர்கள் தான். ஒவ்வொரு ஒன் லைனரும் அவனது
பாத்திரப்படைப்பை திடமானதாக ஆக்குகிறது.
You should believe in Satan; He believes you.
I'm the man for this nasty little job.
Hey demon, I could use a little attention here.
இந்த
தொகுப்பில் மூன்று நாவல்கள் உள்ளன. Hold Me எனும் நாவலின் கிராஃபிக்
படங்கள் பென்சில் ஸ்கெட்ச் போலத் தெரிந்தாலும் மிக நுணுக்கமாக
அமைந்துள்ளது. ஒவ்வொரு பாத்திரத்திரத்தின் முக உணர்வு மட்டுமல்லாது
உடல்மொழியும் மிக அருமையாக ரசிக்கும்படி இருக்கிறது.
ஜான் கான்ஸ்டாண்டைனின் உலகம் பற்றி தனி புத்தகமே எழுதலாம்.
அவர் புழங்கும் உலகத்தை சுற்றியே அவரது பாத்திரப்படைப்பு அமைந்துள்ளது.
வேசிகள், குஷ்டரோகிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள் என கான்ஸ்டாண்டைன்
விளிம்பு மனிதர்களின் தலைவன். அவர்கள் அனைவரும் கான்ஸ்டாண்டைனிடம் மிக
இயல்பாக ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களது கஷ்டங்களை அவனும் அனுபவிக்கிறான்.
சமூக அங்கீகாரத்தை எதிர்பாராது அவர்களுடன் புழங்குகிறான்.
கிராஃபிக் நாவலில் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை ஆலன் மூர்
படைப்புகள் உடைத்துக்கொண்டே இருக்கும் என்பது வல்லுனர்களின் கூற்று.
கார்ட்டூனிஸ்டாக தனது வாழ்வைத் தொடங்கியவர் கிராஃபிக் உலகின் ஆகச் சிறந்த
படைப்பாளியாகவும் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.
தலைப்பு - Constantine - HellBlazer collection
இணையத்தில் வாங்க - Flipkart.com
No comments:
Post a Comment