தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் படித்ததில் இருந்து அவருடைய மற்ற படைப்புகளையும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் வாங்கிய புத்தகம் இது.
பாலியல் உணர்வு தரும் கதைகளை நிறையப் படித்திருக்கிறேன். அதை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமேதும் இல்லை. அந்தக் கதைகள் ஒரு எல்லைக்குள் நின்றுவிடும். பதின்வயதில் அவற்றைப் படித்தபோது ஒரு கிளுகிளுப்பு உண்டாகும். கற்பனையில் அந்தக் கதைகளின் சம்பவங்கள் விரியும்போது சிறிது நேரத்திற்கு ஒரு இன்பத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்தக் கதைகள் போகக்கூடிய தூரம் அவ்வளவே.
மீனின் சிறகுகள் நாவலும் அவை போன்ற ஒன்றுதான் என்றால் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். இவற்றில் இருந்து இந்த நாவலைத் தனித்து நிற்கச் செய்வது எது? அல்லது இந்த நாவல் எந்தப் புள்ளியில் இருந்து அவற்றைத் தாண்டிச் செல்கிறது?
தஞ்சை பிரகாஷ்
இந்த நாவல் பாலுணர்வு பற்றிய பல கேள்விகளை முன்வைக்கிறது. நாவலில் விவாதிக்கப்படும் சில விஷயங்கள் முன்பே வாசகருக்குத் தெரிந்திருக்கக்கூடும். ஆனாலும் மீண்டும் ஒருமுறை கதாபாத்திரங்களின் உரையாடல் வழியே படிக்கும்போது அவை இன்னும் தெளிவாகலாம்.
வழக்கமான ஒரு பாலுணர்வுக் கதைபோலத்தான் நாவல் தொடங்குகிறது. கதாநாயகன் ரங்கமணி. பெரிய இடத்துப் பையன். படிப்பில் படுசுட்டி. காரியத்தில் படுகெட்டி. பாசுரங்களும் சுலோகங்களும் அத்துப்படி. சங்கராச்சாரியாரிடமும், ஜீயரிடமும் பாராட்டுகள் பெற்றிருக்கும் அளவிற்குப் பாண்டித்தியம்.
அவன் வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு காலனி (பெருமாள் ஸ்டோர்). அங்குள்ள மனிதர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டே பசிதான். ஒன்று வயிற்றுப்பசி, இன்னொன்று காமம். ரங்கமணி அங்கிருக்கும் பெண்கள் ஒருவரையும் விடுவதில்லை.. இது அங்கிருக்கும் எல்லாப் பெண்களுக்கும் தெரியும். காலனியில் இருக்கும் ஆண்களுக்கும் தெரியும்.
உங்களுக்குக் கிருஷ்ண லீலை நினைவிற்கு வரலாம். முன்னுரையில் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும் அவ்வாறு குறிப்பிடுகிறார், “...இது ஒரு வகையான கிருஷ்ண லீலையைத் தற்காலப் பின்னணியில் வைக்கிறது...”
ரங்கமணியின் பாத்திரப் படைப்பு அருமை, இது கத்தி மேல் நடக்கும் வித்தை. இம்மி பிசகினாலும் விரசமாகிவிடும். பெயர் மறந்துபோன ஜெயகாந்தன் அவர்களின் கட்டுரை ஒன்றில் வரும் விஷயம் நினைவிற்கு வருகிறது. கிருஷ்ணன் என்ற மிகப் பெரிய ஆளுமைதான் ராதா-கிருஷ்ணன்-மற்ற கோபியர் பக்தி பாவத்தை விரசம் இல்லாமல் புரிந்து கொள்ள வைக்கிறது என்ற பொருள் வரும்படி எழுதியிருப்பார்.
இது ஒரு பெரிய விசித்திரம். எல்லாப் பெண்களுக்கும் ரங்கமணி மேல் கண். போலவே ரங்கமணிக்கும். இது எல்லாப் பெண்களுக்குமே தெரிந்த விஷயம். ஆனால் பொதுவிதி நமக்குக் கற்றுத் தருவதென்ன? ஒரு பெண் எதை வேண்டுமானாலும் பங்கு போட்டுக்கொள்வாள் – காதலனைத் தவிர.
ரங்கமணி மேல் பெருமாள் ஸ்டோர் பெண்களுக்கு இருக்கும் பிடிப்பைச் சொல்லியிருக்கும் விதம் அபாரம். மேலும் இதுகுறித்து யோசித்தபோது கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களின் இந்தக் கவிதைதான் நினைவிற்கு வந்தது.
என்னெய அடீங்கொ கொல்லுங்கொகண்டெதுண்டெமா வெட்டிபோடுங்கொகாவலுக்கு ஆள் போடுங்கொநீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ_மாப்புள்ளைக்கெஎன்னெக் கட்டி வெய்யுங்கொகட்டிக்கெறென்அவனுக்குப் புள்ளெ பெத்துத்தரச் சொல்லுங்கொ பெத்துக்கெறென்ஆனா_என்னிக்காவது ஒருநாஎங்கெய்யாவது ஒரு வாட்டிஅவரு வந்து ‘வா போயர்றலாம்’னுகூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொஎன்றெ அப்பென்மேலெ சத்தியமாச் சொல்றென்போட்டெது போட்டபெடி கெடக்கெஅப்பெடியெ அவருகூடப்போயிர்ருவென்... ஆமா.
பாலியல் தொடர்பான அவதானிப்புகள் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வாயிலாகவே வெளிப்படுவது அருமை. பல பத்திகளில் அவற்றை விளக்கியிருந்தால் சலிப்பூட்டுவதாக அமைந்திருந்திருக்கக் கூடும்.
நாவல் கிருஷ்ணியுடனான சம்பாஷனையுடன் துவங்குகிறது. அவளுடனான சம்போகத்துடன் முடிகிறது. திட்டமிட்டு இவ்வாறான தொடக்கம் முடிவுகளை நாவலாசிரியர் அமைத்தாரோ அல்லது தற்செயலோ, எதுவாயினும் பொருத்தமாகவே இருக்கிறது.
ஒருவிதத்தில் பெருமாள் ஸ்டோர் பெண்கள் ரங்கமணியைத் தாண்டிச் சென்று விடுகிறார்கள் அல்லது இது போதும் என்று ஒதுங்கி விடுகிறார்கள் என்றும் ரங்கமணி மட்டும் அங்கேயே தேங்கி விடுவது போலவும் தோன்றுகிறது. இன்னொரு விதத்தில் ரங்கமணிக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை அதனால் தேக்கம் என்பது இல்லை என்றும் தோன்றுகிறது.
நாவலில் பல உரையாடல்கள் மிகவும் கவர்ந்தன. அவற்றுள் இரண்டை மட்டும் இங்கே தருகிறேன்.
“...பசி உந்துதல், காமம் கடத்தல். பசிதான் மனுஷ்யனின் சரித்திரம், காமம்தான் அவன் இலக்கியம். பசி வேதம். காமம் அதன் உச்சாடனம்...” – ரங்கமணி
“...புடிக்காமெ இருக்கும்போது போட்டு மிதிக்யறா மாதிரி ஏறி விழறது... ஏதானும் எந்த மிருகத்துக்கிட்டயானும் உண்டா? உபசாரம்தான் வேணும். விபசாரம் வேண்டவே வேண்டாம்!” – பவானி.
“...என்னே தப்பு சொல்றே! நன்னா யோசிச்சுப் பாருக்கா நீ! பொம்னாட்டி பின்னாலே சுத்திண்டிருக்கறது ரங்கமணி மாமா மட்டுமா? பெரு!மாள் ஸ்டோர்ல எல்லாப் பசங்களும் அதே காரியம்தான் பண்ணிண்டிருக்கான். மேலவீதில யார் பாக்கி? எல்லாரும்தான். உலகம் பூரா போம்மனாட்டிகளைத் தேடிண்டு கெடறா-கெடுக்கறா. நாசமாக்கறா! அது தெரியலையா நோக்கு! ரங்கமணி மட்டும்னு ஏன் நீயாவே ஆத்திரப்படறே...”- பவானி.
*
நாவலில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உண்டு. நாவலில் மகாதேவ அய்யங்கார் என்று ஒரு பாத்திரம். நாராயண அய்யங்காரின் பெண் பெயர் லலிதேச்வரி. பொதுவில் ஸ்மார்த்தர்கள் இந்தப் பாகுபாடு பார்க்கமாட்டார்கள். சிவ,விஷ்ணு நாமங்களை வைப்பார்கள். அய்யங்கார்கள் அப்படி இல்லை. சிவ நாமங்களை வைப்பதில்லை.
வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவல் ஒன்றில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாம்பசிவ அய்யங்கார் என்று பெயர்!
*
மீனின் சிறகுகள் |_தஞ்சை பிரகாஷ் |_காவ்யா பதிப்பகம் |_விலை ரூ.260/- |_பக்கங்கள் 330
இணையம் மூலம் வாங்க: உடுமலை
No comments:
Post a Comment